Thursday, 28 February 2019

நிகழ்ந்தும் நிகழாத...


















நிகழ்ந்தும் நிகழாத.....

கோ. மன்றவாணன்

ஜெகதீசன் வேகமாக வந்து என் கடைவாசலில் தன் வாகனத்தை அவசர அவசரமாக நிறுத்திய போது ஸ்டாண்ட் சரியாக விரியாததால் வாகனம் கீழே சரிந்தது. அதை அவர் கவனிக்காமல் படியேறி என் கடைக்குள் வந்தார். கண்கள் அழுது அழுது சிவந்து போனதுபோல் தெரிந்தது. “என்னாச்சு ஜெகதீசுக்கு” என்று என்மனம் பதற, நான் இருக்கைவிட்டு எழுந்து அவரை நோக்கி வந்து, “என்ன ஜெகதீஷ்... ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன நடந்துச்சு?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல் “வாங்க ஸ்கூலுக்குப் போலாம்” என்று விரைவுப்படுத்தியதோடு கீழே விழுந்துகிடந்த வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்தார். நான் பின்னிருக்கையில் அமர்ந்தேன். வழக்கத்தைவிட அதிவேகமாக வண்டியை ஓட்டினார். அந்த வேகத்தில் நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. ஆனால் அதை அவரிடத்தில் தெரிவிக்கவில்லை. அவர் பையனும் என் பையனும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது அவர் பையனுக்கு ‘ஏதோ ஆயிடுச்சு” என்று மட்டும் மனசு சொல்லியது. 

கம்மியம்பேட்டைப் பாலம் வழியாகச் சென்று, செம்மண்டலத்தில் கிழக்குப் புறமாகத் திரும்பினார். எதிரே வேகமாக வந்த டவுன் பஸ் டிரைவர் சாமர்த்தியமாப் பிரேக் அடித்து நிறுத்தியதால் நாங்கள் மோதாமல் நிலைதடுமாறி வாகனத்தோடு சாய்ந்தோம். “யோவ் அறிவிருக்காயா? நீ வந்து மோதிடுவே. போலீசுல பெரிய வண்டின்னு என் பேர்ல வழக்குப் போடுவாங்க. நான்தான் ஜாமின் கீமின்னு செலவு பண்ணனும். வருஷக் கணக்கா கோர்ட்டுக்கு நடக்கணும்” என்று கோபமாகப் பேசினார். பஸ்ஸூக்குள் இருந்தவர்களும் எங்களைப் பார்த்துத் திட்டினார்கள். என்ன திட்டினார்கள் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. 

பரபரப்பிலும் பதற்றத்திலும் வாகனத்தை ஓட்டிய தன்மேல்தான் தவறு என்பது ஜெகதீசனுக்குத் தெரியாமல் இல்லை. எங்கள் மனக்கவலையில் அந்த வசவுகள் எதுவும் எங்களுக்குள் இறங்கி இரசாயன மாற்றம் ஏதும் செய்யவில்லை. மீண்டும் வாகனத்தைத் தூக்கி நிறுத்தி ஸ்டார்ட் செய்து புறப்பட்டோம். கடலூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றான ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நுழைவுக் கேட்டின்மேல் மோதிவிடுவதுபோல் போய்நின்றது ஜெகதீசன் ஓட்டிய வண்டி. “தமிழ்ச்சங்கத்துல பொறுப்பாளர்களாக இருந்துட்டுப் பிள்ளைகள இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கறீங்களே” என்று எங்களைப் பிறர் குத்திக்காட்டுவது நினைவுக்கு வந்து போனது. 

எங்கள் அவசரத்தையும் பதற்றத்தையும் கவனித்த வாட்ச்மேன் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தார்.

பள்ளி முதல்வர் நடராசன் எங்கள் பதற்றத்தைப் புரிந்து உட்காரச் சொன்னார். நாங்கள் உட்காரவில்லை.

“சார், பையனப் பாக்கணும்”
“இரண்டு பேர்ல யாருடைய பையன்?”
“ரமேஷ் சார் பையன் பாரத்” என்றார் ஜெகதீசன்

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. வயிற்றின் வலப்புறத்தின் உள்ளிருந்து அஞ்சாறு தவளைகள் துள்ளிக் குதித்து ஓடுவன போல் இருந்தது. கைவிரல்களின் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. சட்டென்று முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் வியர்வைப் பொங்கியது. பயம் என் குரலைக் கம்மி செய்தது. கணீரென்று மேடையில் பேசிய என்குரல் பயத்தால் ஒடுங்கிப் போனது. பேச முயன்ற போது ஒலிக்குப் பதிலாகப் பெரும்பாலும் காற்றுதான் வந்தது. பள்ளி முதல்வர் அங்கிருந்த ஆசிரியைகளிடம் சொல்லி என்னை ஓர் அறைக்கு அழைத்துப்போய் அமர வைத்தார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். குடிக்க மறுத்துவிட்டேன். ஏசி போட்டார்கள். எனினும் என் வியர்வை அடங்கவில்லை.

சுதாகரித்து ஜெகதீசனிடம் கேட்டேன். ”என்னாச்சு என் மகனுக்கு?”
“எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க”

அய்யோ என்று அலறுவது தெரிகிறது. ஆனால் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. கண்ணீர் மலமலவென வழிந்தது. சேரில் இருந்து சரிந்து கீழே விழுந்தேன்... புரண்டேன். அந்தத் தகவல் பொய்யாகி விடாதா என்று கடவுளிடம் வேண்டினேன். செடல் போட்டுக்கொள்வதாக பஸ் ஸ்டாண்ட் நாகம்மாளிடம் உறுதி சொன்னேன். ஒரு வயது இருக்கும்போது அவனுக்கு இதயத்தில் ஓட்டை. சென்னைக்குச் சென்று மருத்துவர் செரியன் அவர்களிடம் காட்டினேன். அவர் சிகிச்சை அளித்தார். அந்த இதயக் கோளாறுதான் மறுபடியும் ஏற்பட்டு இப்படி ஆகிவிட்டதோ என்று கருதிய போது, என் இதயத்தில் ஈட்டிகள் இறங்கின.

சற்று நேரத்தில் பாரத் வகுப்பறையில் இருந்து அழுதபடியே ஓடி வந்தான். உடன் ஒரு ஆசிரியரும் அவன் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடி வந்தார்.

“என் டாடிக்கு என்னாச்சு” என்ற பயத்தில் வந்தவனைப் பார்த்ததும் தளர்ந்து சுருண்டு கிடந்த எனக்கு எப்படித்தான் தெம்பு வந்ததோ, பட்டென எழுந்து அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி முகம் தலை எல்லாம் முத்தம் இட்டேன். கண்ணீரும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மனோபாவத்தில் உணர்ச்சியின் உச்சி முகட்டில் நான் இருந்தேன். அந்த அனுபவத்தை எந்த எழுத்தாளராலும் விவரிக்க முடியாது என்றுதான் நம்புகிறேன்.. 

இதைப் பார்த்ததும் ஜெகதீசனுக்கும் மகிழ்ச்சிதான். கூடவே ஒரு தர்ம சங்கடமும் பிடுங்கித் தின்னும் அவமானமும், தீர விசாரிக்காமல் எனக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்ட தத்தளிப்பிலும்  அவர் தவித்ததை உணர்ந்தேன். ஆனால் அவர்மீது கோபம் ஏதும் இல்லை. நல்லெண்ணத்திலும் என்மீது உள்ள உண்மையான அக்கறையாலும்தான் அவர் அப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவரின் தர்ம சங்கடத்தையும் தவிப்பையும் போக்கும் வகையில் அவரின் இருகைகளையும் பற்றி அணைத்துக்கொண்டேன்.

நானும் ஜெகதீசனும் இளம்வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். நான் ஓவியத்தைத் தொழிலாகவும் எழிலாகவும் செய்து வருகிறேன். ஜெகதீசன் வேளாண் துறையில் சாதாரண ஊழியராகப் பணியாற்றுகிறார். துறையின் துணை இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் ஆகியோரிடம் பரிந்துரைத்து வேளாண் திட்டங்கள் குறித்த சுவர் விளம்பரம், ஃபிளக்ஸ் விளம்பரம் ஆகிய ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தந்து எனக்கு எப்போதும் உதவுகிறார்.

அன்று அலுவலகத்தில் இருந்த ஜெகதீசன் செல்பேசியில் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்தது. அனுப்பி இருந்தவர் ஸ்ரீதேவி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயில்மோதி இறந்துவிட்டார்.” இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ந்துதான் போனார்.

“ரமேஷிடம் எப்படிப் போன் போட்டுப் பேசுவது? அவருக்கு இந்தத் தகவல் தெரியுமா? ஒரு வேளை தெரியாமல் இருந்தால் நாம் சொல்லி அவருக்கு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமா?” என்று பதைபதைத்துள்ளார்.  என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் “டெத் ஒண்ணு. அவசரமாகப் போறேன்”னு அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார். ஆனால் அவர் வாட்ஸ்அப்பின் தகவலை முழுமையாக உள்வாங்கவில்லை. ரமேஷ் மகன் இறந்துவிட்டார் என அவர் மனதில் பதிந்து, பள்ளியில்தான் அந்தத் துயர்நிகழ்வு நடந்ததாக அவசர கதியிலும் மனப்பதற்றத்திலும் காட்சியை அவராகவே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

லுவலகத்தில் பணியில் இருந்த போது ஸ்ரீதேவியின் செல்போனில் வாட்ஸ்அப் ஒலி எழும்பியது. அவர் வணிகவியல்தான் படித்தவர் என்றாலும் சங்க இலக்கிய அறிவாற்றலில் பல தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மேம்பட்டவர். இலக்கிய வட்டத்தில் நல்ல பெயர் உண்டு. அதனால் அவருக்கு நட்பு வட்டமும் பெரிதாக இருந்தது. வாட்ஸ் அப் செய்தியைத் திறந்து பார்த்தவருக்குப் பெருத்த அதிர்ச்சி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.” இதுதான் அந்தச் செய்தி. ரமேஷ் ஓவியர் மட்டுமல்ல நல்ல கவிஞரும் கூட. சமூக நற்பணி மன்றங்கள் அனைத்திலும் அவரின் குரல் ஒலிக்காமல் இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் வாழ்ந்து காட்டும் அதிசய மனிதர் அவர். எந்த நேரமானாலும் யார் என்ன உதவி கேட்டாலும் ஓடிவந்து உதவும் குணமும் அவருடையது என்ற ரமேஷின் குணச்சித்திரம் ஸ்ரீதேவியின் மனத்தில் அழுத்தமாக வரையப்பட்டிருந்தது.

ரமேஷ் என்ற பெயரைப் பார்த்ததும் அதிர்ந்த ஸ்ரீதேவி அந்தத் தகவலை மற்ற இலக்கிய அன்பர்களுக்கு முன்னகர்த்தினார். அந்த நேரத்தில் பாண்டியன் அவர்களிடமிருந்து போன் வந்தது. அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி,

“சார்... ரமேஷ் மகன் ரயிலில் விழுந்து இறந்துட்டானாம். என்னென்னு விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சிட்டுச் சொல்றேன்” என்றவர் போனை வைத்துவிட்டார். காத்திருந்து பார்த்தும் பாண்டியனிடமிருந்து விசாரிப்புத் தகவல் எதுவும் வரவில்லை. அலுவலகத்தில் அவசர வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்ய ஸ்ரீதேவிக்கு மனம் ஓடவில்லை. “வேற யாரை விசாரிக்கலாம்“ என்று யோசித்தபடி செல்போனில் இருந்த காண்டாக்ட் பகுதியில் தேடினார்.

அந்த நேரம் சொல்லி வைத்தாற்போல் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் வந்தார். அவரை விசாரித்த போது சொன்னார். ”நீங்க நினைக்கிற மாதிரி இறந்து போனது ஓவியர் ரமேஷ் மகன் இல்லீங்க. கம்யூனிஸ்ட் கட்சி ரமேஷ் மகன்தான் ரயிலில் விழுந்து இறந்துட்டார்.”

இதைக் கேட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் அதிர்ச்சி. கம்யூனிஸ்ட் ரமேஷின் மனைவி அவருக்கு நெருங்கிய தோழி. அனிச்சம் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கெல்லாம் ரமேஷ் குடும்பத்துடன் வருவார். அவருடைய பையன் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் பரிமாறுவதற்கு உதவி இருக்கிறான். ஸ்ரீதேவியின் மனக்கண்ணில் அவனின் சூரிய முகம்  ஒளிர்ந்தது.

காலையில் வீட்டைவிட்டு சைக்கிளில் சென்றவன் இன்னும் வரவில்லை என்று நேற்று இரவு 2 மணிவரை கடலூரில் உள்ள எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் ரமேஷ் தன் மகனைத் தேடித் தேடி அலைந்து பார்த்திருக்கிறார். பல நண்பர்களும் தேடி ஓய்ந்துபோனார்கள். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று விசாரித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

விடிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, எப்படியும் தன் மகன் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையில் கண்ணயர்ந்தார் ரமேஷ். ஆனா அவருடைய மனைவி மட்டும் தூங்காமல் அழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போயிருந்தது.

அவருடைய பையன் 12 ஆம் வகுப்பு படித்தான். மூன்று முறை தேர்வு எழுதியும் அவனால் தேர்ச்சி அடைய முடியவில்லை. அதுபற்றி எதுவும் கோபமாகப் பேசியதில்லை ரமேசும் அவருடைய மனைவியும். பிள்ளைகளின் உளவியல் தெரிந்து நடக்கக் கூடியவர்கள். பெற்றோர் பிள்ளைகள் அணுகுமுறை, ஆசிரியர் மாணவர் அணுகுமுறை பற்றியெல்லாம் கல்வி நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறார் ரமேஷ்.. அதனால் அவர் அவனை அடித்ததும் இல்லை. கண்டித்ததும் இல்லை.

“ஒருவேளை கடிதம் எதுவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறானா” என்று வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார். அலமாரியில் துணிமணிகளை எல்லாம் அவசர அவசரமாகச் சரித்துத் தள்ளித் தேடினார். கடிதம் எதுவும் இல்லை. கீழே தள்ளிய பொருட்களை எடுத்து உள்ளே வைக்காமல் அலமாரியை மூடிவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார்.

காலை ஆறு மணிக்கு ரமேஷ் செல்போன் மூன்றுமுறை அலறி ஓய்ந்தது. யாரும் அதை எடுத்துப் பேசவில்லை. வெளியில் கிடந்த துணிமணிகளை எடுத்து உள்ளே வைப்பதற்காக அலமாரியைத் திறந்த ரமேஷின் மனைவியின் கண்களில் கணவரின் செல்போன் தெரிந்தது. அவசரத்தில் தன் செல்போனை அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதில் மூன்று மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து, “என்னங்க... போன அலமாரியில வைச்சிட்டீங்க. மூணு மிஸ்டுகால் வந்துருக்கு. என்னன்னு கேளுங்க” என்று சொல்லி ரமேஷிடம் கொடுத்தார்.

முக்கியமான தகவலாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டார்.

“சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.”
“சார்... நாங்க ஸ்டேசனிலிருந்து பேசறோம். பல தடவை உங்கள தொடர்புகொள்ள முயற்சி செஞ்சோம். நீங்க எடுக்கல.”
“சார்... பையனைத் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தளர்ந்துபோய் படுத்துட்டேன். ஏதாவது தகவல் கிடைச்சுதாங்களா?
“இல்ல சார். ஆனா... டீ சர்ட்டும் பள்ளிக்கூட யூனிபார்ம் பேண்ட்டும் போட்ட ஒரு சின்ன வயசுப் பையனோட பாடி ஆஸ்பிட்டல இருக்குது. ரயில்வே போலீசார் சொன்னாங்க. நிச்சயமாக ஒங்க மகனா இருக்க மாட்டான். எதுக்கும் ஒருதடவை போய் பாத்துட்டு வந்துடுங்க.”

ரமேஷின் கையிலிருந்து செல்போன் நழுவிய நிலையில் அதை சுதாகரித்துப் பிடித்துக்கொண்டார்.

“என்னங்க பேசினிங்க? ஏதாவது தகவல் கிடைச்சுதுங்களா?”
...........
“என்ன பேச மாட்றீங்க? நம்ம பையனுக்கு எதாவது ஆயிடுச்சா?”
“எதுவும் ஆவாதும்மா.”
“கொஞ்சம் இரு. ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்துடுறேன்.”
“எங்கப் போறீங்க? நானும் வரேன்”
“இரும்மா... கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.”
“எங்கப் போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எம்மனசு அமைதியா இருக்காது?”
“இல்லம்மா... கட்சி ஆபிசுக்குப் போயிட்டு வந்துடுறேன்.”

மருத்துவமனை ஊழியர் அய்யாசாமிக்குப் போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுத் தனது ஹோண்டா சைனில் பறந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் சங்கத் தலைவர் அய்யாசாமி காத்திருந்தார். “மார்ச்சுவரியைப் பார்க்கணும்” என்றார் அவரிடம். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மார்ச்சுவரிக்கு ரமேசை அழைத்துச் சென்று காண்பித்தார் அய்யாசாமி.

ஒரேஒரு பாடிதான் கிடத்தப்பட்டிருந்தது. கிடத்தப்பட்டிருந்தது என்று சொல்வதைவிட ஒரு மனித படத்தைத் துண்டுதுண்டாக வெட்டி, பிறகு ஒன்று சேர்ப்பதுபோல் உறுப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. தலை தனியாக இருந்தது. கைகளும் கால்களும் துண்டுத்துண்டுகளாகச் சிதைந்து கிடந்தன. உள்ளே நுழைந்ததும் கிழிந்து சிதைந்த டீ சர்ட்டும் பேண்டும் ரமேசை நிலைகுலையச் செய்துவிட்டது. அது தன்மகனின் டீ சர்ட்டுதான். அந்தப் பேண்ட் அவன்படித்த பள்ளிக்கூட சீருடைதான்.

ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற உடல்பருமனும் மனபலமும் கொண்ட ரமேஷ் வாய்விட்டுக் கதறி அழுதார். அவரை அருகில் இருந்த அய்யாசாமி தாங்கிப் பிடித்துப் பிணவறையிலிருந்து வெளியில் அழைத்துவர முயன்றார். ஆனால் அவர் மீறி மீறி உள்ளே சென்று பார்த்துக் கதறினார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சமாதானம் சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தார்கள். அவர் அழுவதைப் பார்த்து அய்யாசாமியின் கண்களிலும் கண்ணீர்த் திவலைகள். வெறுங்கையால் துடைத்துக் கண்ணீரை மறைக்க முனைந்தார்.

“எம்மகன் மேல ஒரு துரும்புகூட விழாம பாத்துக்கிட்டிருந்தேனே. அவன எதிர்த்து ஒரு வார்த்த கூட  நான் சொன்னதில்லையே. ரயில்முன் விழ எப்படித் துணிஞ்சான்? என்ன கஷ்டம் பட்டிருப்பான்?” என்று சொல்லிச் சொல்லி அழுதவரை சமாதானப்படுத்த முடியாத நேரம் அது. அழுது தீர்த்த பிறகுதான் சமாதானப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த அய்யாசாமி, “போஸ்ட்மார்ட்டம் முடிச்சு நாங்க கொண்டாந்துடுறோம். டூவீலரை நான் எடுத்துட்டு வரேன். நீங்க இந்த ஆட்டோவுல வீட்டுக்குப் போங்க” என்று ஒருவாறு சொல்லி ஒப்பேத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வியக் கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு பூங்குடுவைக்குள் கொத்தாகச் செருகப்பட்டிருந்த தூரிகைகளில் ஒன்றை எடுத்து வண்ணம் தோய்த்து வெள்ளட்டையில் ஓடவிட்டேன். என்ன வரையப் போகிறேன் என்ற திட்டம் எதுவும் எனக்கில்லை. வரைந்தபின்தான் உணர்ந்தேன். என்னை அறியாமல் நான்வரைந்தது ஒரு சிறுவனின் படம். அதுவும் நான் அடிக்கடி கடந்துபோகும் திருப்பாதிரிப்புலியூர் ரயில்பாதையில்... அடிபட்டுச் சிதைந்து கிடக்கும் சிறுவனின் படம். எப்படி இதை நான் வரைந்தேன் என்று இன்றுவரை புலப்படவில்லை. நான் வரைந்த படத்தைப் பார்த்து நானே அழுதேன்.  படமாக வரையப்பட்ட சிறுவன் எனக்கு வேண்டியவன் இல்லை. என் கண்களில் ஏன் நீர்பெருக்கெடுக்கிறது? அப்போது எழுத்தாளர் வளவ. துரையன் வந்தார். நான் கண்ணீரைத் துடைத்து மறைத்தேன். அதை அவர் கவனித்திருக்க முடியாது. மேசையின் மீது விரித்து வைத்திருந்த சிறுவனின் படத்தைப் பார்த்த அவர், “அட படம் தத்ரூபமாக இருக்கிறது” என்று பாராட்டியதோடு இதை அடுத்த ‘சங்கு” இதழுக்கு அட்டைப்படமாக வச்சிடுங்க. படத்துக்கேற்ப கதையோ கவிதையோ எழுதித் தந்துடுறேன்” என்றார். அவருக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. “ரமேஷ்... வீட்டுல கூப்புடுறாங்க. நான் அப்பறம் வந்து பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் நான் படத்தைப் பார்த்தேன். படத்தில் இருந்த சிறுவன் என் மனதுக்குள் நுழைந்து என்னமோ பண்ணுகிறான் என்பது தெரிகிறது. எத்தனையோ படம் வரைந்துள்ளேன். எதுவும் இதுபோல் என்மனதைப் பாதித்ததில்லை. படத்தைச் சுருட்டி வைத்தேன். அந்தப் படம் மனதுக்குள் விரிந்தது. அந்தச் சிறுவன் என்னிடம் பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

ரயில்மோதி இறந்தது என் மகன் இல்லை என்பதில் நான் எல்லையில்லாத சந்தோஷம் அடைந்தேன் என்பது உண்மைதான். இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் மகிழ்ச்சி அடையத்தான் செய்வார்கள். உள்மனம் என்னை விரல்நீட்டிக் குற்றம் சுமத்தியது. “மகன் இறக்கவில்லை என்று மகிழ்கிறாய். தன்மகன் எனக்கருதி இறந்த யாருடைய மகனுக்காகவோ அழுது புரண்டாய். இப்போதும் அந்த யாரோ ஒருவரின் மகன் இறந்து கிடக்கிறான். ஏன் அவனுக்காக இப்போது கவலைப்படவில்லை. தன் வீட்டில் நடந்தால் அது துக்கம். அடுத்த வீட்டில் நடந்தால் அதைத் துக்கமாக ஏன் கருதுவதில்லை. என்ன இருந்தாலும் ஓர் அரைமணிநேரம் இறந்த சிறுவனை மகனாகக் கருதி அந்தத் துயரை... துக்கத்தை... வலியை நீ அடைந்திருக்கிறாய். இன்னும் அடக்கம் செய்யாமல்  அந்தச் சிறுவன் பிணமாகத்தான் கிடக்கிறான். இந்த நேரத்தில் நீ மகிழ்ச்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்” என்று நீதிக்கூண்டில் ஏறி மனசாட்சி உரக்கப் பேசியது.

ஜெகதீசன் இப்போது என் கடைக்கு வந்தார். அவர் அமைதியாக இருந்தார். “இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்றார். ஆனால் எனக்கு நிம்மதி இல்லை என்பதை அவர் அறிய மாட்டார். மேலும் சொன்னார்.

“ரயிலில் அடிபட்ட சிறுவனின் இறுதி ஊர்வலம் அஞ்சு மணிக்காம். அந்த இன்னொரு ரமேசும் எனக்கு நண்பர்தான். போய் பாத்துட்டு வந்துடலாமா?.”

நான் எதுவும் சொல்லவில்லை. கடையை விட்டு இறங்கி ஜெகதீசனுடன் புறப்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை தாண்டியதும் வண்டியை நிறுத்தச் சொன்னேன். பூக்கடையில் நிறைய மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இருந்ததிலே பெரிய மாலையை பேக் செய்யச் சொன்னேன். என்ன விலை என்று ஜெகதீசன் கேட்டார். 350 ரூபாய் என்றார். பேரம் பேசிய ஜெகதீசனைத் தடுத்தேன். பூக்கடைக்காரர்கள் அதிகம் விலை சொல்வது வழக்கம்தான். பேரம் பேசி வாங்குவதும் அங்கு இயல்பான நடைமுறைதான். நான் பூக்கடைக்காரர் கேட்ட விலையை அப்படியே குறைக்காமல் கொடுத்துவிட்டு மாலையை வாங்கிக்கொண்டேன். நான் சாதாரணமாகப் பஸ்நிலையத்தில் கூறுகட்டிக் கொய்யாப்பழம் விற்கும் பாட்டிகளிடம் அடாவடியாகப் பேரம் பேசி மிகக்குறைந்த விலையில் வாங்குபவன்தான். பேரம் பேசுவதில் நான் தேர்ந்தவன் என்பதால் என் நண்பர்கள் எந்தப் பொருள் வாங்கப் போனாலும் என்னை அழைத்துக்கொண்டு போவார்கள். இது ஜெகதீசனுக்கும் தெரியும் என்பதால் என் நடவடிக்கையை விநோதமாகப் பார்த்தார்.

கம்யூனிஸ்ட் ரமேஷ் வீட்டுத் தெருவில் நுழைந்தோம். ஏராளமான கூட்டம். ட்ரம் மற்றும் கிளாரினெட் வைத்து ஒரு இசைக்குழு சோக இசையைக் காற்றில் கரைத்தபடி இருந்தது. “நாதர்முடி மீதிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே” என்று பாடிக் கொண்டிருந்தார். அதில் “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” என்று உச்ச ஒலியில் வாசித்தார். அதைக் கேட்டதும் கண்ணுக்குள் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. கண்ணில் அழுகையோடும் கையில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த நான், சிறுவன் கிடத்தப்பட்டிருந்த குளிர்ப்பெட்டியின் மீது மாலையை வைத்து அதன்மீதே விழுந்து அழுதேன். இறந்த சிறுவன் வீட்டாருக்கு நான் உறவினன் இல்லை. அந்தச் சிறுவனை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. கம்யூனிஸ்ட் ரமேஷ் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் பீறிட்டு வந்த அழுகையைத் தடுக்க என்னால் முடியவில்லை.

மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் ரமேஷ், என்னைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரவைத்தார். அப்போதும் என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

நான் ஏன் இப்படி அழுகிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கும்தான்.

தினமணி கதிர், 28-10-2018

No comments:

Post a Comment