Wednesday, 31 October 2018

மன்னிப்பாயா?







“நீ அழகு” எனச் சொல்ல மறந்து
நிலவை அழகென்றேன்

உன் சொல்லமுது இனிதென அருந்தாது
தமிழருந்தினேன்

உன் விழி படபடப்பை ரசிக்காமல்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில்
சிறைபட்டு மகிழ்ந்தேன்

இன்று மலர்ந்த ரோஜாவை
உனக்குச் சூட்டாமல்
அம்மனுக்கு வைத்து அழகு பார்த்தேன்

உன்
பட்டாடையின் வனப்பில் மயங்காது
பஞ்சவர்ணக்கிளியின் நிறத்தில்
மனம்கரைந்து போனேன்.

எல்லாம்
உனக்குள் உள்ளபோது
வெளியில் எட்டிப்பார்த்ததில்
வெளிப்பட்டன மாயைகள்

மன்னிப்பாயா?

-கோ. மன்றவாணன்

Monday, 22 October 2018

காதலின் வானிலை




















மேகம் திரண்டது அந்த வானத்தில்
சோகம் திரண்டது அவள் வதனத்தில்
இடிவிழுந்த போது விண் அதிர்ந்தது
ஏசிய பேச்சில் மண் அதிர்ந்தது
மின்னல் வெட்டிய போது கண்மிரண்டது
விழிவாளால் வெட்டிய போது தலைதுவண்டது
அடைமழை பெய்தபோது நிலம்மூழ்கியது
அழுத கண்ணீரில் உளம்மூழ்கியது
காற்று சுழன்று சூறாவளியாய் மாறியது
காதல் கழன்று புயல்தாண்டவம் அரங்கேறியது

புயல் ஓய்ந்தபின் கணக்கெடுக்கையில்
சேதாரம் ஆனது
இருவர் வாழ்க்கையும்

கோ. மன்றவாணன்

Sunday, 14 October 2018

இடைவெளி























எழுதும் பேசும் சொற்களின்
இடைவெளியை நிரப்பும்
மவுனமாய் மலரும் கவியொன்று

முதுகில் ஒட்டிப் பிறந்தவைதாம்
வடதுருவமும்
தென்துருவமும்

இடைவெளி எனும் சொற்கூட்டில்
வெளியேறிப் போனது
இடைவெளி

என்
தோட்டத்துப் பூவின் பனித்துளியில்
சுடர்ந்தது
தூரத்து மலைக்கோவில்

நிலவுக்கும்
நிலத்துக்கும் பிரிவில்லை
குளத்தில் நீராடுது நிலா

என்னைப் பிரிந்து எங்கோ சென்றாள்
கண்தொலைவுக்கு அப்பாலும்
கடல்தொலைவுக்கு அப்பாலும்

எங்களுக்குள்
இடைவெளியை உருவாக்கவிடாமல்
காவல் புரிகின்றன 
காதல் நினைவுகள்

இடைவெளியின் இருபுறங்களையும் 
இணைத்தபடியே இருக்கும்
கண்ணுக்குத் தெரியாத
காந்தக் கோடுகள்

-கோ. மன்றவாணன்






Tuesday, 9 October 2018

பால்ய வீதியில்





















சிறுபாதங்களின் முத்தத்தால்
சிலிர்த்த
பால்ய வீதி
பள்ளிக்கூடம் ஆனது எங்களுக்கு

பீங்கான் கோப்பையும்
குண்டு பல்புமாக ஒளிசிந்திய
தெருவிளக்குக் கூடுகளில்
சிட்டுக்குருவிகள் குடியிருந்த போதே
தெரிந்துகொண்டோம்
சிற்றறையிலும் வாழ்ந்து களிக்க

கண்ணாமூச்சி ரே...ரே...
காட்டுப்பூச்சி ரே...ரே... என
ஒளிந்து விளையாடிய போதே
உணர்ந்துகொண்டோம்
வெற்றியின் ரகசியத்தைக் கண்டறிய

பால்வேறு பாடின்றி
பால்ய நாட்களில்
ஒருகாலில்
சில்லு விளையாடிய போதே
தெரிந்துகொண்டோம்
ஊனத்தை வெல்லும் உத்தியை

சாட்டையைச் சுற்றிப் பம்பரத்தைச்
சுழல விடும்போதே
அறிந்துகொண்டோம்
ஆட்களை
ஆட்டுவிக்கும் நிர்வாகக் கலையை

மூச்சு விடாமல் பாடியும்
மொத்த நபர்களை ஒருங்கிணைத்தும்
கபடி ஆடிய போதே
கற்றுக்கொண்டோம்
கூட்டுப்பணியின் சூத்திரத்தை

-கோ. மன்றவாணன்