Friday, 23 February 2018

அந்நாளே திருநாள்






         வாடகை ஏதும் கொடுக்காமலே
         மாமரத்தில் குடியிருக்கும் அணில் சொன்னது :
         மாங்கனி பழுக்கும் ஒவ்வொரு நாளும்
         மனதினிக்கும் திருநாளே!

         நட்சத்திரக் கூட்டம் சொன்னது :
         மேகம் மறைக்காத இரவு ஒவ்வொன்றும்
         மின்னொளி வீசும் திருநாளே!

         என்வீட்டு ரோஜா செடி சொன்னது :
         எதிர்வீட்டு இளம்பெண் பூப்பறிக்கும் நாள் ஒவ்வொன்றும்
         காதல் தேசத்தை விலைபேசும் திருநாளே!

         சுவரில் வரைந்த காந்தி ஓவியம்
         சொன்னது :
         தவறியும் தீங்கிழைக்காத நாள் ஒவ்வொன்றும்
         மனித நேயத்துக்கு உயிரூட்டும் திருநாளே!

         அழிவின் விளிம்பில் இருக்கும் மரம் சொன்னது :
         வெட்டக் கோடரி எடுத்து வராத நாள் ஒவ்வொன்றும்
         பசுமை தீட்டும் திருநாளே!

         நீதிமன்றத்தில் சிறைபட்ட காவிரி சொன்னது :
         என்னை என்போக்கில் விடும் நாள் ஒவ்வொன்றும்
         எல்லையற்ற அன்பின் திருநாளே!

         ஆதார் இல்லாத தெருவாசி சொன்னது :
         ஒருவேளை உணவாவது கிடைக்கும் நாள் ஒவ்வொன்றும்
         இந்தியத் தாயின் கண்ணீர் துடைக்கும் திருநாளே!

         கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment