Monday, 7 November 2016


பட்டாசு சத்தம்

அக்கம் பக்கத்து
வீட்டு வாசல்களில்
இடியோ
வெடியோ என
சிவகாசி பட்டாசு
சீறிச் சிதறுகிறது

தரையில் சுற்றும்
தங்கக் கிரகம்போல்
சுழன்று நகர்கிறது
சங்குச் சக்கரம்

ஒளிப்புனலை
வானை நோக்கிப் பீய்ச்சி அடிக்கிறது
கலசம்

சிரிப்பு உதிர்க்கும்
சின்னக் குழந்தைகளுக்குப் போட்டியாகச்
சிதற விடுகிறது
ஒளிச்சிரிப்பை
மத்தாப்பூ

காலி பாட்டலை ஏவுதளமாக்கி
விண்ணில் வளைந்து நெளிந்து
பாய்கிறது ராக்கெட்
குப்பத்துக்
குடிசை வீடுகளைப் பயமுறுத்திவிட்டு 

வெற்று அரசியல்வாதிகளின்
மேடைப் பேச்சைப்போல்
வேடிக்கை காட்டிவிட்டுத்
தெருவைக் குப்பையாக்குகிறது
ஊசிப் பட்டாசு

தன்வீட்டு வாசலில் மட்டும்
பட்டாசு சத்தம் கேட்கவில்லையே என
ஏங்கிய ஏழைச்சிறுமி
வெடிக்காத பட்டாசுகளின் மருந்துகளைச்
சேகரித்து வந்து
பொட்டலம் கட்டினாள்

பாதி எரிந்தவிந்த
திரியொன்றைப் பொருத்தித்
தீப்பற்ற வைத்தாள்

அவளுக்கு மட்டுமே கேட்குமாறு
அது புஸ்ஸென்று சத்தமிட்டு
அமுங்கிப் போனது

ஒடுக்கப்பட்டு
ஓரம் ஒதுங்கிய மக்களின்
நியாயக்குரலைப் போலவே…!


- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment