Saturday, 27 August 2016


வானமழை நீ எனக்கு

இலக்கின்றி நான்நடந்தேன்
இருட்டுக்குள் தான்கிடந்தேன்
விளக்கொன்றை ஏற்றிவழி காட்டி வைத்தாய் – என்னுள்
விதவிதமாய் வண்ணங்கள் தீட்டி வைத்தாய்!

வறண்டுவிட்ட நிலமாக
வற்றிவிட்ட குளமாக
புரண்டுவிட்ட என்வாழ்வை மீட்டுத் தந்தாய் – ஒரு
புதுராக மெட்டமைத்துப் பாட்டுத் தந்தாய்!

ஊர்மதிக்க வில்லையடி
உள்ளத்தில் தொல்லையடி
வேர்நசிந்து நான்சாயும் போது வந்தாய் -  உன்
மென்தோளில் எனைத்தாங்கி முத்தம் தந்தாய்!

அழகில்லை பணிஇல்லை
அட,வாழ்வே இனிஇல்லை
இழவுவீட்டுப் பிணமானேன்; என்ன நினைத்தாய்? – ஓர்
இதயமாக உயிராக வந்து அணைத்தாய்!

உனைப்பார்த்து முளைவிட்டேன்
உனைநினைத்து இலைவிட்டேன்
வாழ்வதற்கே கிளைவிட்டேன் பெண்ணே பெண்ணே! – என்றும்
வானமழை நீஎனக்குக் கண்ணே கண்ணே!

 - கோ. மன்றவாணன்




No comments:

Post a Comment