Saturday, 8 February 2025

ஞாயிறாய் ஒளி வீசும் தமிழ் அறிஞர்


 

ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்



முன்சொல் கேளீரோ...

 

தமிழில் இப்படி ஒரு மொழி அறிஞர் இவருக்கு முன் இல்லை. இவருக்குப் பின்னும் இல்லை. எனினும் பாவாணரை அடிஒற்றி மொழியியல் ஆய்வாளர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

உரிய அளவில் பாவாணரைப் போற்றிக் கொண்டாடத் தவறிவிட்டது தமிழ் உலகம் என்பதில் வருத்தம் உண்டு. தமிழ்படித்த பலருக்கே பாவாணரைத் தெரியவில்லை என்பது பெருந்துயர்.

பாவாணர் யார்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் இந்நுால்.

பாவாணரின் வாழ்வும் பணியும் குறித்து அறிமுகம் செய்கிறது இந்த மின்நுால்.

இந்த வரலாற்றுக் கட்டுரையைச் சங்கொலியில் வெளியிட்ட மக்கள் நேயர் வைகோ, திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருநாவுக்கரசு ஆகியோர்க்கு இந்த நேரத்தில் நன்றி.

இந்நுாலைப் படிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தமிழ்ப்பேரறிஞரைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் நேரமும் இருந்தால் படியுங்கள்.

பணிவுடன்


கோ. மன்றவாணன்.

  

 


ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்

 

ஒருவரை நிரந்தரமாக மறந்துவிடுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பொன்னாடை போர்த்துவது; இன்னொன்று நுாற்றாண்டு விழா கொண்டாடுவது என்று கண்ணதாசன் சொன்னதுபோல், தேவநேயப் பாவாணர் மறக்கப்படக் கூடியவர் அல்லர்.

     இவர்  போன்ற மொழிநுால் அறிஞர்கள் இந்த உலகில் மிகமிகக் குறைவு. இவர்க்கு இணையான மொழிநுால் அறிஞர்கள் இதுவரை இல்லை. இனிப் பிறக்கப் போவதும் இல்லை என்ற அளவுக்கு மொழி அறிவில் முத்திரை பதித்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

 


வாழ்க்கைக் குறிப்பு

     திருவள்ளுவர் ஆண்டு 1933 சுறவம் (தை), திங்கள் 26 ஆம் நாள் (07-02-1902) அன்று திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள பெரும்புத்துார் என்ற ஊரில் பாவாணர் பிறந்தார். அவரின் இயற்பெயர் தேவநேசன்.

     அவரின் தந்தையார் பெயர் ஞானமுத்து. தாயார் பரிபூரணம் அம்மையார். தம் ஐந்தாம் அகவையில் தந்தையைப் பறிகொடுத்தார். அடுத்த சில காலத்திற்குள் அன்னையையும் இழந்தார். அதன்பின் தன் மூத்த அக்காவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

     பாவாணரின் முதல் மனைவி எசுதர் ஆவார். மணவாள தாசன் என்ற ஆண்மகவை ஈன்ற பிறகு எசுதர் இறந்துவிட்டார். அதன்பிறகு தன் அக்காள் மகள் நேசமணியை மணந்துகொண்டார். தேவநேசன் – நேசமணி இணையர்க்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

     வறுமைப் புயல்காற்று வீசிய போதும் கல்வி விளக்கை அணையாமல் பாதுகாத்துக் கொண்ட பாவாணர், பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை கல்வியில் சிறந்து விளங்கினார்.

     பாவாணர், பல்வேறு ஊர்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியர் பணியைத் தனித்திறத்தோடு ஆற்றினார். அவர், ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும்; இருபத்து இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியிலும்; பன்னிரண்டு ஆண்டுகள் கல்லுாரியிலும்; ஐந்தாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.

 

 கல்வித் தகுதி

    

     தமிழ்ப் புலமைக்காகக் கீழ்க்காணும் கல்விப் பட்டங்களைப் பாவாணர் பெற்று இருந்தார்.

     1.    மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்

     2.    திருநெல்வேலித் தென்இந்தியத் தமிழ்ச்சங்கப்   புலவர்

     3.    சென்னைப் பல்கலைக் கழக வித்துவான்

     4.    பி.ஓ.எல். என்னும் கீழ்க்கலைத் தேர்வு

     5.    கலை முதுவர்

 

     இவற்றில் 1924 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வு எழுதியவர்கள் பலர். ஆனாலும் அந்த ஆண்டு பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் பாவாணர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

     இதே போல் 1926 ஆம் ஆண்டில் திருநெல்வேலித் தமிழ்ச் சங்கப் புலவர் தேர்வு எழுதியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த ஒருவர் நம் பாவாணர்தான்.

     அந்தக் காலத்தில் புலவர் – பண்டிதர் – வித்துவான் தேர்வுகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவற்றில் தேர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல. அத்தகைய தேர்வுகளிலும் வென்று சிறந்து விளங்கியவர் பாவாணர்.

 


பாவாணர்

என்ற பெயர்

    

     அன்றைய காலக் கட்டத்தில் ஒருவரைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்த்த வேண்டுமானால், “இவர் தமிழ் கற்பிக்கத் தக்கவர்” என்று புகழ் பெற்ற புலவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.

     அந்த அடிப்படையில் பண்டிதர் மாசிலாமணி என்பவர், “இவர் தமிழ் கற்பிக்கத் தகுந்தவர்” என்று ஒரு சான்றிதழைத் தேவநேசனுக்கு (பாவாணருக்கு) வழங்கினார். அந்தச் சான்றிதழில் தேவநேசனைத் “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் குறிப்பிட்ட “கவிவாணன்” என்னும் பெயரே பின்நாளில் “பாவாணர்” என்று தமிழில் மாற்றப்பட்டு அவருக்கே உரிய சிறப்புப் பெயராக நிலைத்து வருகிறது.

 

முதல் கட்டுரை

 

     1931இல் “செந்தமிழ்ச் செல்வி” என்னும் இதழில்தான் பாவாணரின் முதல் கட்டுரை வெளியானது. அதன் தலைப்பு, “மொழி ஆராய்ச்சி”. அன்று தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் “செந்தமிழ்ச் செல்வியில்” ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் குவித்தார். பாவாணரின் அறிவுத் திறம் வெளிப்படுவதற்குச் “செந்தமிழ்ச் செல்வி” பெரிதும் துணை புரிந்தது.

     பாவாணர் தம் எழுத்து வல்லமையாலும் ஆய்வுத் திறத்தாலும் 35க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார்.  அந்த ஒவ்வொரு நூலும் ”முனைவர்” பட்டத்துக்கு உரியது. அத்தனையும் தமிழுக்குக் கிடைத்த அரிய கருவூலங்கள்.

  மறுக்க முடியாதபடி- மறக்க முடியாதபடி- தமிழின் அனைத்துப் பெருமைகளையும் நிலை நிறுத்திய பெருமை பாவாணரின் நூல்களுக்கு உண்டு.

          இத்தனை நூல்கள் எழுதித் தொண்டாற்றிய பாவாணர், எந்த ஒரு நூலிலும் தன் ஒளிப்படத்தை (Photo) வெளியிட்டுக் கொண்டதில்லை.

          தமிழ்தான் அவர் முகம் என்பதால், தனியாக ஒளிப்படம் எதற்கு?

 


பன்மொழிப் புலமை

    பாவாணரின் பல்வேறு ஆற்றல்களில் ஓங்கி நிற்பது, அவருடைய பன்மொழிப் புலமை.

     மொழி ஆராய்ச்சியில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் தேவநேயப் பாவாணர். அதனால்தான் “மொழிநுால் மூதறிஞர்” என்றும் மொழி ஞாயிறு” என்றும் பாராட்டப்படுகின்றார்.

     மொழி ஆராய்ச்சி செய்வது என்பது எளிதான ஒன்றன்று. எல்லாராலும் செய்யக் கூடியதும் அன்று. மொழி ஆய்வு செய்வதற்கு- வரலாறு, மாந்தர் இயல், அரசியல், தொல்லியல், பொருளியல் போன்ற பல்துறை அறிவு தேவைப்படுவதோடு பன்மொழிகளையும் அறிந்து இருக்க வேண்டும்.

     அதற்காக அவர் பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சீனம், சமற்கிருதம், அரபு, ஆங்கிலம், செருமன், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், மராட்டியம், இந்தி  உள்ளிட்ட 23 மொழிகளில் இலக்கண இலக்கியப் புலமையைப் பெற்று இருந்தார். அவருடைய ஆய்வுகளில் 58 மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைக் கையாண்டு இருக்கிறார்.

     அவர் இத்தனை மொழிகளை அறிந்து இருந்தார் என்றால், அவருடைய முயற்சி எத்தகையது? அவருடைய ஆற்றல் எத்தகையது? அவருடைய அளவிட முடியாத அறிவு எத்தகையது? என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுகிறோம்.

 

 பாடல் – இசை

    

     பாவாணர் இளமையிலேயே பாடல் எழுதும் திறம் படைத்தவராக இருந்தார். பல்வேறு யாப்புகளில் ஏராளமான பாக்கள் எழுதி உள்ளார். இசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். “இசைத்தமிழ்க் கலம்பகம்” “இசையரங்கு” “இன்னிசைக் கோவை” ஆகியவை பாவாணரின் இசைப்பாடல் தொகுப்புகள் ஆகும்.

     இசைப் பாடல்கள் எழுதுவது மட்டும் இன்றி, அவற்றைத் தாமே வாய்விட்டுப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.

     இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் தமிழ் உணர்வு ஊட்டும் பாடல்களையும் தெருதோறும் பாடிச் சென்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தார். தமிழர்களைக் கிளர்ச்சியுறச் செய்தார்.

     மன்னார்குடியில் இருந்த யாழ்புலவர் இராச கோபாலரிடம் முறையாக இசை பயின்றார். கின்னரம் (பிடில்), வீணை, இசைப்பெட்டி (ஆர்மோனியம்), மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை நேர்த்தியாக இசைப்பதில் தேர்ச்சி பெற்று இருந்தார்.

     தம் துணைவியார் மறைந்த போது துயரத்தில் மூழ்கிய பாவாணர் கின்னரத்தின் துணையைத்தான் நாடினார்.

 

  

தமிழா…?

மதமா…?

    

   கிறித்துவ மதத்தைச் சார்ந்த பாவாணர், மதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தமிழுக்கே முதல் இடம் கொடுத்தார். அவருடைய பிள்ளைகளுக்கு அவர் சூட்டிய அழகு தமிழ்ப் பெயர்களே அதற்குச் சான்று. அந்தத் தமிழ் மணக்கும் பெயர்கள் இதோ…

     மணவாள தாசன்

     நச்சினார்க்கினிய நம்பி

     சிலுவையை வென்ற செல்வராயன்

     அருங்கலை வல்லான்

     மடம் தவிர்த்த மங்கையர்க்கு அரசி

     மணிமன்ற வாணன்

     பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்

 


சொல்லாக்கம்


    

இக்காலத்தில் ஆங்கிலப் போலித் தனத்துக்குத் தமிழன் அடிமை ஆகிவிட்டான். அதனால் தமிழ், தமிங்கிலம் ஆனது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் நுால்களில் தமிழைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது. திட்டமிட்ட சமற்கிருதக் கலப்பால் தமிழ் “மணிப்பவழ நடை” போட்டு நொண்டிச் சறுக்கியது.

இந்த இழிநிலையைத் துடைத்து எறிவதற்காக….

சமற்கிருதம் மற்றும் பிற மொழிகள் துணையின்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது என்று தமிழ் அறிஞர்கள் மெய்ப்பித்துக் காட்டினர்.

திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் எழுத்திலும் பேச்சிலும் தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டனர்.

இயக்கத் தோழர்கள் பலர், பெற்றோர் சூட்டிய பிறமொழிப் பெயர்களைத் துறந்து தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியது.

எனவே தமிழ் மறுமலர்ச்சி பெற்றது.

சமற்கிருதத்தின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிய தமிழ் மீட்டு எடுக்கப்பட்டது.

தமிழை மீட்டு எடுப்பது மட்டுமன்று. அந்தத் தமிழைப் புதுப்பிக்கும் பணியையும் செய்வதுதான் தமிழ் வளர்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் என்பதை உணர்ந்தவர் பாவாணர். தமிழுக்குப் புதுப்புதுக் கலைச் சொற்களைப் படைத்து அளித்தார் அவர்.

அந்தக் காலத்தில் பல தமிழ்ச் சொற்களே, வேற்று மொழிச் சொற்களாகக் கருதப்பட்டன. அத்தகைய சொற்களுக்கு வேர் மூலம் கண்டு, அவை தமிழ்ச் சொற்களே என விளக்கம் அளித்து, நுாற்றுக் கணக்கான தமிழ்ச்சொற்களை மீட்டுத் தந்தவர் பாவாணர்.

என்று தோன்றியது என்று தெரியாத தொன்மை வாய்ந்தது நம் தூய தமிழ்மொழி. உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் உயிரோடு உலா வரும் மொழி தமிழ். கணினி காலத்துக்கு ஏற்பவும் தன்னைத் தக்க வைத்துக் கொண்ட மொழி, தமிழ்மொழி. இந்த மொழி இன்னும் இளமையோடும் இனிமையோடும் வாழ வேண்டுமானால், நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அறிவியலுக்கு ஏற்ப- வாழ்வியலுக்கு ஏற்பப் புதிய புதிய சொற்களைத் தமிழுக்குப் படைத்து அளிக்க வேண்டும்.

“சென்சஸ்” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் “சிசுபால விருத்த ஸ்திரி புருஷ விருத்தி சங்கியா” என்ற நீ… ண்…ட…. தமிழ் அல்லாத சொல்தொடரைத் தமிழில் புகுத்திய கொடுமை தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. சென்சஸ் என்ற அந்தச் சொல்லுக்குப் பாவாணர் தந்த தமிழ்ச் சொல் “குடிமதிப்பு”

புதிய சொற்கள் ஆயிரக் கணக்கில் சேரச் சேர மொழி மேலும் மேலும் வளம் அடையும். அதற்காகத்தான் பாவாணர் அல்லும் பகலும் உழைத்தார். இன்றும் அவர் அடிஒற்றிப் புதிய புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்கு வந்த வண்ணம் உள்ளன. மருத்துவக் கலைச் சொற்கள், பல்துறைக் கலைச் சொற்கள் எல்லாம் தனித்தமிழில் படைக்கப் படுகின்றன.

இப்படிப் புதிய சொற்களை உருவாக்குவதற்குப் புதிய மலர்ச்சாலை அமைத்து வழி காட்டியவர் பாவாணர்.

 

சொல்லாக்க

வழிமுறைகள்

    

தமிழில் புகுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு உரிய சரியான பொருத்தமான தமிழ்ச் சொற்களை அறிவதில் அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார்.

 

1.     பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தே சரியான சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துதல்.

2.      சிற்றுார்ப் புறங்களில்… மலைப்பகுதிகளில்…     குறிப்பிட்ட வட்டாரங்களில் மக்கள் பேசும்    வழக்குத் தமிழில் இருந்து சரியான சொற்களைக் கண்டுபிடித்துப்   பயன்படுத்துதல்.

3.                     புதயதாகச் சொற்களைப் படைத்து அளித்தல்

 

புதிய கலைச் சொற்களை உருவாக்குவதில் ஏறத்தாழ இருபது முறைகளை வகுத்துக் கொடுத்து உள்ளார். தமிழுக்கு எட்டு இலக்கம் (இலட்சம்) சொற்களைத் தொகுத்தும் உருவாக்கியும் தருவேன் என்று ஒருமுறை பாவாணர் சொல்லி உள்ளார். இதில் இருந்து, மொழித்துறையில் எத்துணை ஈடுபாட்டுடன் அவர் உழைத்து இருக்கிறார் என்பதை நாம் உறுதியாக உணர முடியும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சிற்றுார் மக்களிடத்தில்… மலைவாழ் மக்களிடத்தில் தங்கி இருந்து- அவர்களோடு பழகிப் பேசி- அவர்களின் இயல்பான பேச்சில் இருந்து  அரியபல தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து தொகுத்து உள்ளார் பாவாணர். இதற்காக அவர், குடும்பத்தை மறந்து, வருமானத்தைத் துறந்து, எத்தனை இரவு பகல் செலவிட்டு இருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.

 

 ஒரு நிகழ்ச்சி

     

சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பாவாணரை ஓர் அன்பர் அழைத்துச் சென்றார். அப்படி அழைத்துச் செல்லும் போது, வழியில் ஒரு பாம்பாட்டி மக்களைக் கூட்டி வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட பாவாணர், அந்தப் பாம்பாட்டியின் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு நின்று இருந்து பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தார். பாம்பாட்டி, நிகழ்ச்சியை முடித்துக் காசு வாங்கிக் கொண்டு “மூட்டை” கட்டும்வரை பாவாணர் அங்கேயே இருந்தார்.

இதுபற்றி அன்பர், “எவ்வளவோ பெரிய அறிஞர் நீங்கள். இப்படித் தெருவில் நின்று  பாம்பாட்டியின் வித்தையைப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

“தம்பி, ஏட்டில் காணக் கிடைக்காத அரியபல தமிழ்ச் சொற்களை இந்தப் பாம்பாட்டி இயல்பாகப் பேசக் கூடும். எனவேதான் அந்தப் பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டேன். பாம்பாட்டி பேசியதில் இருந்து, இன்றுகூட சில சொற்களைக் குறித்துக் கொண்டேன். இவை தமிழுக்கு வலுவூட்டும்” என்றார்.

 

 சொல்லுக்கு


வரலாறு

    

இந்த உலகில் பிறந்த எல்லாருக்கும் வரலாறு உண்டு. அதுபோல் மொழியில் தோன்றிய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஒவ்வொரு சொல்லும் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து விளக்குவதே சொல்பிறப்பியல் ஆகும். அத்தகைய அரிய துறையில் தனித்த பேரரறிவும் பேராற்றலும் பெற்று இருந்தவர் பாவாணர்.

எனவே, செந்தமிழ்ச்    சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்குவதே தம் வாழ்நாளின் குறிக்கோள் ஆகக் கொண்டிருந்தார் பாவாணர்.

அதற்குப் பொருள்செலவு மிகுதி ஆகும். ஏழை அறிஞரால் எப்படி இந்தப் பணியை நிறைவேற்ற முடியும்? இதற்காகப் பாவாணரின் மாணவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினார்.

     அதன்படி, தமிழ் அன்பர்கள் மாதம் தோறும் கொடுத்து வந்த குறிப்பிட்ட தொகையைக் கொண்டு அப்பணியைச் செய்து வந்தார்.

     இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டில் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை” உருவாக்கி, அதற்குப் பாவாணரை இயக்குநராக அமர்த்தினார். இந்தத் திட்டம், பாவாணருக்காவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் அந்தப் பணி முழுமை அடையவில்லை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு ஆகும். அவர் முடித்து வைத்திருந்த அகர முதலியின் ஒரு பகுதியைக் கூட நூலாகப் பார்க்கும் வாய்ப்புப் பாவாணருக்குக் கிடைக்கவில்லை. பாவாணர் மறைந்த பிறகே, “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் முதல் மடலத்தின் முதல் பகுதி வெளியிடப்பட்டது.

 


சிறப்புக் குறிப்புகளில்

சில…

 

1. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது திருவேங்கடமும் திருத்தணியும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற எல்லை காக்கும் போராட்டத்தில் பாவாணர் ஈடுபட்டார்.

2.     இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இயன்றவரை பங்கு கொண்டார். தம் வீட்டில் தமிழ்க்கொடி ஏற்றினார். இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். “இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?” மற்றும் “The Language Problem of Tamilnadu and its Logical Solution”  ஆகிய நூல்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

3.      ஆட்சிச் சொல் தொகுப்பில் பங்கேற்றார்.

4.  தொடக்கத்தில் ஆங்கிலப் பற்று மிக்கவராக இருந்தார். எருதந்துறை (ஆக்சுபோர்டு) பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தார்.

5.  சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியின் குற்றம் குறைகளை அம்பலப்படுத்தி அதனை நூலாகவும் வெளியிட்டார்.

6.    தமிழ், உலகின் முதல்மொழி என்பதையும் செவ்வியல் மொழி என்பதையும் உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிட்டுக் காட்டி, ஆய்வு நோக்கில் நிலை நிறுத்தும் “The Primary Classical Language of the World” என்ற ஆங்கில நூலை எழுதி உள்ளார்.

 7.    பல அறிஞர்கள் எழுதுவார்கள்… பேசுவார்கள். அத்தோடு சரி. செயல்பட மாட்டார்கள். ஆனால் பாவாணர் தம் எண்ணங்களையும்  செயல் திட்டங்களையும் நிறைவேற்ற “உலகத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்து பணி ஆற்றினார். தமிழகம், ஆந்திரம், கருநாடகம், புதுச்சேரி முதலிய பல இடங்களில் ஏராளமான உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் செயல்பட்டன.

8. 1943இல் திருச்சியில் “தமிழ்ப் புலவர் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

9.    தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு நடத்தினார்.

10.   முதன்மொழி என்ற மாத இதழை நடத்தினார்.

11.   தென்மொழி ஏட்டின் சிறப்பு ஆசிரியராக இருந்தார்.

12.  பாவாணரின் அனைத்து நூல்களும் நாட்டு உடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

 

பாவாணரின்

ஆய்வு முடிவுகளில் சில…

 

1.    மாந்தன் பிறந்தகம், குமரிக் கண்டமே.

2.    உலக முதல் மாந்தன் தமிழனே.

3.    தமிழ், குமரிக் கண்டத்தில் தோன்றிய ஞால முதல்        மொழி.

4.    தமிழ், திராவிட மொழிகளின் தாய்.

5.    தமிழ், உலக மொழிகளுக்கு மூலம்.

6.    சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி தமிழ்.

7.   தமிழில் கலந்துள்ள வடசொற்கள் எல்லாம் தேவை அடிப்படையில் விரும்பிக்      கடன் கொண்டவை அல்ல. அவை, தமிழைக் கெடுப்பதற்கு என்றே ஆரியரால்      புகுத்தப்பட்டவை.

8.    பிறமொழித் துணை இன்றித்  தமிழ் தனித்து இயங்கும்; தழைத்து ஓங்கும்.

9.    மொகஞ்சோதரா, அரப்பா நாகரிகம் பழந்தமிழ்   நாகரிகமே.

 

இறுதிப் பேச்சும்


இறுதி மூச்சும்

    

     கம்ப ராமாயணம், மகா பாரதம் மற்றும் இலக்கியங்களில் இருந்து கதை சொல்லுவோர்… நயம் பாராட்டுவோர்தாம் இந்த நாட்டில் “தமிழ் அறிஞர்களாக” வலம் வருகின்றனர். அவர்கள் போல் அல்லாமல், உண்மையாகவே தமிழ் அறிஞராக வாழ்ந்து, தமிழ் அறிஞர் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார் பாவாணர்.

     இறுதியாக அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு ஆகும். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சிறப்பாக நடத்திய மாநாடு அது. அந்த மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். அதன்பின் பாவாணருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

     16-01-1981 அன்று வைகறை 0-30 மணிக்குப் பாவாணரின் உயிர் பிரிந்தது. ஆனால், “பாவாணரின் தமிழ்” நம்மைவிட்டுப் பிரியாது.

     அன்றைய தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர். அவர்கள், சென்னை மாவட்ட மைய நுாலகத்துக்குத் தேவநேயப் பாவாணர் நூலகம் எனப் பெயர் சூட்டினார்.

 

 

பாவாணரின்


நினைவைப் போற்ற…

 

1.    தாய்மொழியாம் தமிழ்மீது பற்றுக் கொள்வோம்.

2.    குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவோம்.

3.    பிறமொழி கலவாது தமிழ் பேசுவோம். எழுதுவோம்.

4.   புதிய சொற்களைப் படைத்துத் தமிழை மேலும் மேலும் வளப்படுத்துவோம்.

5.    மொழி ஆய்வுப் பணி தொடரத் துணை நிற்போம்.

6.    தமிழ்வழிக் கல்விக்கு வழி செய்வோம்.

7.    அனைத்துத் துறைகளிலும் தமிழை உயர்த்துவோம். நாமும் உயர்வோம்.

 

 


தமிழ்அயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே


தமிழ்உயரத் தான்உயர்வான் தான்.

                     - பாவாணர்