![]() |
நெடுமாலை அடைந்த
ஞானியார் அடிகள்
ஃ
திருப்பாதிரிப்புலியூர்
ஞானியார் அடிகள், தம் பேச்சினூடாக அவ்வப்போது சிலேடையாப் பேசுவார். அந்தச்
சிலேடைப் பேச்சில் செந்தமிழ்த்தேன் வழிந்தோடும். சிந்தனை அமுதம் திரண்டுவரும்.
ஞானியார்
வீர சைவ மரபினர் என்றாலும் சமய வேறுபாடு பாராதவர். வைணவ இலக்கியங்களிலும் ஆழ்ந்த
புலமைகொண்டவர்.
ஒருமுறை
திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சாமித் திருக்கோவிலுக்குச் சென்றார். ஞானியாரைக்
கண்ட வைணவர் பலரும் ஏதேனும் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டும் எனக் கோரினர்.
ஆண்டாள்
அருளிய திருப்பாவையின் முதல் பாடலை மட்டும் எடுத்தாய்ந்து அரியதொரு சொற்பொழிவு
ஆற்றினார். வைணவப் பெருமிதங்களை மிக அழகாக விரித்துரைத்துப் பேசினார். அதைக் கேட்ட
வைணவர்கள் பெரிதும் வியந்து மகிழ்ந்தனர்.
அந்த
அளப்பரிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தேவநாத பெருமாளுக்கு அணிவித்திருந்த நெடியதொரு மாலையை எடுத்துவந்து ஞானியாரின்
திருமேனியில் அணிவித்தனர். அவர்களைப் பார்த்து ஞானியார் சிலேடையாகச் சொன்னார்.
“இன்று
நான் நெடுமாலை அடைந்தேன்.”
இன்று
நான் நீண்டதொரு மாலையை அணிந்தேன் என்றும்- இன்று நான் நெடிதுயர்ந்து விளங்கும்
திருமாலை அடைந்தேன் என்றும் இருபொருள்கள் அந்த ஒரு சொற்றொடரில் உள்ளன.
ஃ
ஞானியார்
இளம்பருவத்தில் இருந்த காலத்தில் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயர் அவர்களைத்
திருமடத்திற்கு வரச்செய்து தமிழ்கற்றார்கள். ஒவ்வொரு நாளும் சில பயிற்சிகளைச்
செய்து வருமாறு குறிப்பேட்டில் எழுதுவது ஆசிரியரின் வழக்கம். அவர், யாப்பிலக்கணம்
கற்பித்து வரும்போது ஒரு வெண்பாவைக் குறிப்பேட்டில் எழுதி, அதற்குச் சீர், தளை
முதலியவற்றை எழுதி அடுத்த நாள் காட்ட வேண்டும் என்று சொல்லிச் சென்றார்.
அந்த
வெண்பா இதுதான்.
நற்பா டலிபுரத்து நாதனே
நாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன் – தற்போது
வேண்டும் செலவிற்கு
வெண்பொற் காசுபத்து
ஈண்டு தருக இசைந்து.
அடுத்த நாள் வந்த
ஆசிரியர், அந்தக் குறிப்பேட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் எழுதி வைத்திருந்த
வெண்பாவுக்கு உரிய சீர், தளை ஆகியவை எல்லாம் சரியாக எழுதி வைத்திருந்ததோடு உடன்
பத்து ரூபாயும் இருந்தது கண்டு திகைத்தார்.
அப்போது இளம்பருவத்தில்
இருந்த ஞானியாரைப் பார்த்து, “நான் பாட்டுக்கு (மனம்போனவாறு) எழுதி வைத்தேனே தவிர,
பணம்பெற வேண்டும் நோக்கம் சிறிதும் இல்லை” என்றார் ஆசிரியர்.
அதற்கு ஞானியார், “நான்
பாட்டுக்குத்தான் கொடுத்தேனே அன்றி
வேறொன்றுக்குமில்லை“ என்றார்.
“நான் பாட்டுக்குத்தான்”
என்பதில் நானும் மனம்போனவாறுதான் கொடுத்தேன் என்ற பொருளும்- நான்
பாட்டுக்காகத்தான் கொடுத்தேன் என்ற இன்னொரு பொருளும் உள்ளன.
ஃ
ஞானியார் அடிகள்
சொற்பொழிவாற்றும் போது கீழ்க்கண்ட வெண்பாவைச் சுவை ததும்பவும் மனம் உருகவும் பாடுவார்.
அந்த வெண்பா.
இல்லறத்தான் அல்லேன்
இயற்கைத் துறவியல்லேன்
நல்லறத்து ஞானியல்லேன்
நாயினேன் – சொல்லறத்துள்
ஒன்றேனும் அல்லேன்
உயர்திருப் போரூரா
என்றேநான் ஈடேறு வேன்.
இப்பாடலின் “என்றே நான்
ஈடேறுவேன்?” என்பதை, “என்றுதான் நான் ஈடேறுவேனோ?” என்று வினவுவது போல் சொல்வார்.
அதே பாடலை மறுமுறையும் பாடுவார். அப்போது உயர்ந்து விளங்கும் திருப்போரூரா என்றே
நான் சொல்லியே ஈடேறுவேன் என்ற பொருள்விளங்கச் சொல்வார்.
ஞானியாரின் பேச்சில்
சமயப் பெருமையும் தமிழின் இனிமையும்
இரண்டறக் கலந்தே வரும்.
நன்றி :
தினமணி
05-01-2020