Wednesday, 12 October 2016


பொம்மைகள்

நாளை
கொலு கொண்டாட

அட்டைப் பெட்டிகளில்
அடைத்து வைக்கப்பட்டிருந்த
பொம்மைகளைப்
பொறுமையாக எடுத்தாள்

அழகு பார்த்துக்
கொலுமேடையில்
வைத்தாள்

கொண்டு வந்தாள்
கைலாயத்தை
நடுவீட்டில்

கோபியரோடு கொஞ்சும்
கோகுலத்துக் கண்ணனின்
காதல்வனத்தை
கண்காட்சிக்கு வைத்தாள்

தொப்பை செட்டியாரின்
மளிகைக் கடையில்
வண்ணவண்ணக் கூடைகளில்
வகைவகையான பண்டங்கள்
ஆனால்
ஈக்கள் மொய்க்கவில்லை


கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ளையும் பெண்ணையும் பாரு
எனப் பாட்டிசைத்து

மேள தாளம்
நாதஸ்வரம் என
நகர்ந்து வரும்
இசைவாசிகளின்
விதவிதமான
முக பாவங்கள்

பெட்ரோமாக்ஸ் லைட்
தூக்கி வரும் மீசைக்காரர்கள்

பாயும் குதிரைகள் பூட்டிய
பல்லக்கு வண்டியில்
மாப்பிள்ளையும் பெண்ணும்

என
அமைத்து மகிழ்ந்தவள்
கடைசியாகக்
கல்யாண மேடை அமைத்தாள்

ஐயர் மந்திரம் ஓத
உற்றோர் பெற்றோர் சூழ

நாதஸ்வரக்காரர், தவில்காரர்,
ஒத்து ஊதுபவர் முதலியோர்
ஜமக்காளத்தில் அமர்ந்தபடி
ஜமாய்க்க

மணப்பெண்ணுக்குத் தாலி கட்டும்
மாப்பிள்ளை பொம்மையை எடுத்தபோது
அது
கைதவறி உடைந்து நொறுங்கியது…..
அந்த
முதிர்கன்னியின்
மனத்தைப் போலவே!

சோதிடம்
சொல்லுமோ
சுடுமண் பொம்மைகளும்?

-கோ. மன்றவாணன்