Sunday, 18 September 2016


புன்னகை



நூற்றாண்டுகள்
நடந்தும்
கடந்தும்
மாறாமல் இருப்பது
மோனலிசா
புன்னகை மட்டுமே!

அட… காதலியின்
ஒரு புன்னகையில்
அனைத்தும் மறந்து போகின்றன
அவளைத் தவிர!

பருப்பு விலையைப்
பத்திரிகையில் பார்த்ததும்
தாய்மார்களின் புன்னகை
தற்கொலை செய்து கொள்கிறது.

அரசியல்வாதி
புன்னகை
புரிகையில்
எங்கோ ஒரு மூலையில்
பொங்கி அழுகிறது
நேர்மை.

இலக்கியங்களின்
புன்னகை…
இருட்குகை மனசில்
வெள்ளை அடிக்கிறது.

புன்னகை என்பது
எரிபொருள்,
நட்பு வாகனம்
நான்கு திசைகளிலும் பயணிக்க.

அம்மாவின்
ஒரு புன்னகையில்
மன்னிக்கப்படுகின்றன
மாபாதகக் குற்றங்களும்.

ஆனாலும்…
புன்னகையை
மொத்தமாய்த் தொலைத்துவிட்டனா்
இந்திய மக்கள்.

ரூபாய்த் தாளில்
மட்டுமே
காந்தி புன்னகைக்கிறார்.


கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment