Sunday, 18 September 2016


பாதச் சுவடுகள்



கடற்கரை மணலில்
பதிந்து கிடக்கின்றன
பாதச்சுவடுகள் ஆயிரம்….
யார்சுவடு இதுஎன
யார்சொல்லக் கூடும்?

நர்த்தனம் ஆடும்
நடராசர் கோவிலில் நுழையும்
என்
பாதச் சுவடுகளைப்
பார்க்கின்றன
கால்கள் இல்லாத
மாற்றுத் திறனாளி ஒருவரின்
மனமும் விழிகளும்…

இதுவரை
நான்நடந்த சுவடுகளை
எண்ணியதில்லை
எண்ணாலும் எண்ணத்தாலும்

இன்னும்
எத்தனை சுவடுகள்
என்முன்னே வர உள்ளன?
யாருக்கும் தெரியாது
இந்த இரகசியம்! 

ஹைக்கூ
வடிவேந்திய
வாமனனின் பாதச் சுவட்டில்
பலியாகிப் போனான்
மாமன்னன் மகாபலி

கழி ஊன்றி வந்த
காந்தியின்
பாத யாத்திரையில்
முடிந்து போனது
மகாவெள்ளையரின் இந்தியப் பயணம்

வழிகாட்டும் தலைவர்களின்
வாழ்க்கைச் சுவடுகளைப்
பாது காக்கின்றது
பா(ர)த சரித்திரம்

நானும்
திரும்பிப் பார்க்கிறேன்
தொடர்ந்து வருகின்றன
என்
பாதச் சுவடுகள்

ஓ! அறிவேன் நான்
ஊர்சென்று சேர்வதற்குள்
காற்று
களவாடிக் கொண்டுபோகும்
என்
காலடிச் சுவடுகளை!



 -- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment