புதுமைப் பொங்கல்
· வருக தைமகளே…
வருக தமிழ்மகளே…
உழுதுண்டும் உயராமல்
அழுதுண்டு வாடும்
உழவர் முகங்களில்
புன்னகைப்
பொங்கல் வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
· அரசியல் பிழைத்தோர்
அறங்காவலர்களாய்
அணிவகுப்பு நடத்துகின்றனர் இன்று
அன்னோர்க்கு
அறங்கூற்றாகும் எனும்
சிலம்பு ஏந்தி
செயல் முடிக்க
ரவுத்திரப்
பொங்கல் வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
· கல்விச் சாலைகளும்
கண்அவிந்து கிடக்கின்றன
அதனால்
அகிலம் வியக்க
அறிவு சார்ந்த
கல்விப்
பொங்கல் வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
· நொடிதோறும்
நோய்நொடிகள் ;
நொடிந்து போகும் மக்கள்!
வங்கி இருப்பை
வாரிச் சுருட்டுகின்றன
மருத்துவ மனைகள்.!
உடலிலும் உள்ளத்திலும்
உற்சாகம் வழிய
நலப்பொங்கல்
வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
· காணும் இடமெல்லாம்
கயமையும் பொய்மையும்
கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கின்றன.
ஊர் உலகமெல்லாம்
ஊழல்
பொன்தோரணம் கட்டி விழா நடத்துகிறது.
இனியாவது
எல்லாருடைய மனங்களிலும்
நேர்மைப்
பொங்கல் வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
யாதும் ஊரே
யாவரும் கேளிர் எனச்
சேர்ந்திசை பாடிச்
சமத்துவப்
பொங்கல் வைக்க
வருக தைமகளே…
வருக தமிழ்மகளே!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment