Sunday, 18 September 2016


பேசும் மெளனம்


என்
எதிர்வீட்டுத் தோட்டத்தில்
எனக்காக ஒரு பூ
புன்னகை மொட்டவிழ்த்து
மவுனமாய்
என்
மனதோடு உரசி உரசிப் பேசுகிறது
மற்றவருக்குத் தெரியாமல்

இரவில்
நிலவின்
மவுனத்தை
மொழிபெயர்த்துப் பார்க்கிறேன்
பேசும் கவிதையாகிறது

அகராதிக்குள் அகப்படாத
ஆயிரம்
அர்த்தங்கள் பேசுவது
மவுனம்
மட்டுமே

சொல் பேசும்போது
கவிதை பிறக்கலாம்.
மவுனம் பேசும்போது
ஒரு புத்தன் பிறக்கலாம்.

மவுன விழி
திறக்கும் போது
அங்கே
ஞான மயில்
தோகை விரித்து ஆடும்
மதம்பிடித்து…
மக்கள்திரளுக்குள் நுழைந்த
யானையாய் மனம் ;
அதை
அடக்கும் அங்குசமாய்
மவுனம்.

மனசாட்சி என்பதே
மவுன சாட்சிதான்
அது
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பேசும்
உண்மையை மட்டும்தான் பேசும்

என் தவறுகளுக்கு
என் மனைவி தரும் தண்டனை
மவுனம்தான்
அவளின்
சிலநாள் மவுனம்
சிலம்பேந்திப் பேசும்
அது
சொற்களைத் தாண்டிய
நீதியின் தரிசனம்!

     - கோ. மன்றவாணன்






No comments:

Post a Comment